பஞ்சகருவிகளில் ஒன்றான பனியரிப்பு.
துருவ பிரதேசங்களிலும், உயர் மலை பிரதேசங்களிலும் உள்ள பனிப்பாறைகளில் பனியரிப்பு செயற்படுவதை காணலாம்.
இப்பிரதேசங்களில் காணப்படுகின்ற பனிப்பொழிவுகள் திண்ம நிலைக்கு மாறுவதால் பனிக்கட்டிகள் மற்றும் பனிப் பாறைகள் உருவாகின்றன. இதற்கு காரணம் நீண்டகால பனிப்பொழிவு ஆகும்.
விசாலமான பனிப்படைகளை "கிளேசியர்" என அழைப்பர்.உலகில் 10 சதவீதம் பனிப்பாறைகளால் மூடப்பட்ட நிலப்பரப்பே உள்ளது.
பனி நகரும் போது நில மேற்பரப்பு அரித்தலுக்கு உட்படுகின்றது. இதனையே பனியரிப்பு என்பர். உலகில் பனியாற்று பிரதேசங்கள் இரண்டு வகைப்படும். அவையாவன:-
- மலைப்பனிக்கட்டியாறு.
- கண்டப்பனிக்கட்டியாறு.
உயர் மலை பிரதேசத்தில் உள்ள பனிப்பாறைகளில் ஏற்படக்கூடிய அரித்தல் செயற்பாடுகள் "மலைப்பனிக்கட்டியாறு" எனப்படும்.
உலகில் பாரிய அளவில் பரம்பிக் காணப்படும் (கிளேசியர்) பனிப்பாறைகளில் ஏற்படக்கூடிய அரித்தல் செயற்பாடுகள் "கண்டப்பனிக்கட்டியாறு"எனப்படும்.
மேலும் பனியரிப்பு தொடர்பாக பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த முடியும்.
- பனியரிப்பின் தொழில்கள் எவை?
- பனியரிப்பால் உருவாக கூடிய நிலவுருவங்கள் எவை?
பனியரிப்பின் தொழில்கள் எவை?
பனியரிப்பின் பிரதான தொழில்களாக பின்வருவன உள்ளன.
- அரித்தல்.
- கொண்டு செல்லல்.
- படியவிடல்.
அரித்தல்:-பனியரிப்பின் பிரதான தின்னற் செயற்பாடு அரித்தல் ஆகும்.
கொண்டு செல்லல்:- பனியால் அரிக்கப்பட்ட பருப்பொருட்களை பனியானது பிரதானமாக மூன்று முறைகளில் கொண்டு செல்லும்.
- மேல்வரியாக கொண்டு செல்லல்.
- இடைவரியாகக் கொண்டு செல்லல்.
- கீழ்வரியாக கொண்டு செல்லல்.
மேல்வாரியாக கொண்டு செல்லல் எனும்போது மிகவும் பாரம் குறைந்த பொருட்களை பனியானது காற்றோடு காற்றாக கொண்டுசெல்லும். இது மூடிய நிலை எனவும் குறிப்பிடப்படும்.
இடைவாரியாக கொண்டு செல்லல் எனும் போது பாரம் குறைந்த பொருட்களை பணியானது சுமந்து செல்வதை குறிக்கும்.
கீழ்வாரியாக கொண்டு செல்லல் எனும் போது அதிக பாரம் கொண்ட பருப்பொருட்களை பனியானது நீரோடு நீராக கொண்டு செல்லும்.
படியவிடல்:-பனியால் அரித்து கொண்டு செல்லப்படுகின்ற பருப்பொருட்களை தடைகள் ஏற்படும்போது பனியானது படியவிட்டுச் செல்லும்.
பனியரிப்பால் உருவாக கூடிய நிலவுருவங்கள் எவை?
பனியரிப்பால் அரித்தல் மற்றும் படித்தல் நிலவுருவங்கள் உருவாகின்றன. அவற்றுள் அரித்தல் நிலவுருவங்கள் பின்வருமாறு:-
- வட்டிக்குகை.
- வட்டக்குகை ஏரி.
- கூர்நுனிச்சிகரம்.
- "V"வடிவ பள்ளத்தாக்கு.
- "U"வடிவ பள்ளத்தாக்கு.
- பீடங்கள்.
- செம்மறியுருப்பாறை.
- தொங்கு பள்ளத்தாக்கு.
பனியரிப்பின் படிதல் நிலவுருவங்கள் பின்வருமாறு:-
- மொறைன்கள்.
- படிவுகள்.
- குத்துவாட் பாறைகள்.
பனியரிப்பின் அரித்தல் நிலவுருவங்கள் பற்றி எவ்வாறு விளக்குவது?
அரித்தல் நிலவுருவங்கள்.
வட்ட குகை.
உயர் மலை பிரதேசத்தில் காணப்படக்கூடிய சிறிய குழிகள் மற்றும் தாழிகளில் பனி தேங்கி நிற்கும்.இங்கு இடம்பெற கூடிய உறைதல் மற்றும் உருகுதல் செயற்பாட்டால் சில நாட்களில் அக் குழிகள் மற்றும் தாழிகள் சிதைவடைந்து தனது பருமனில் அதிகரித்து பாரியதொரு குழியாக உருவாகுவதே "வட்ட குகை" எனப்படும்.
வட்டக்குகை ஏரி.
உயர் மலை பிரதேசத்தில் உள்ள பனியின் உறைதல் மற்றும் உருகுதல் செயற்பாட்டிற்கேற்ப உருகிய பனி நீரானது வட்ட குகையில் தேங்கி நிற்கும் நிலை "வட்டக்குகை ஏரி" எனப்படும்.
கூர்நுனிச்சிகரம்.
உயர் மலை பிரதேசத்தில் மலை உச்சியின் நான்கு பகுதிகளிலும் வட்ட குகைகள் காணப்படும் போது கால மாற்றத்திற்கு ஏற்ப அவ் வட்ட குகைகள் மேலும் அரித்தலுக்கு உட்படும். இதனால் மலை உச்சியின் நான்கு பகுதிகளும் அரிக்கப்பட்டு மத்திய பகுதி மட்டும் கூர்மையான சிகரமாக காட்சியளிப்பதே "கூர்நுனிச்சிகரம்" எனப்படும்.
"V"வடிவ பள்ளத்தாக்கு.
பனிப் பாறைகளில் உள்ள சிறிய வெடிப்புகளில் பறித்தல் எனும் தின்னற் செயற்பாடு இடம்பெற்று " v" வடிவத்தில் அரிக்கப்பட்ட பள்ளத்தாக்கு "V"வடிவ பள்ளத்தாக்கு எனப்படும்.
மேலும் பனியின் உறைதல் செயற்பாட்டால் "V"வடிவ நிலவுருவங்கள் உருவாக்கம் பெறலாம்.
"U"வடிவ பள்ளத்தாக்கு.
V வடிவ பள்ளத்தாக்கில் பனியாறு நகரும் போது நிலம் மேலும் அரிக்கப்படுவதால் அல்லது பறிக்கப்படுவதால் உருவாகும் நிலவுருவம் "U"வடிவ பள்ளத்தாக்கு" ஆகும்.
பீடங்கள்.
U வடிவ பள்ளத்தாக்கு மேலும் பனியாறால் அரிக்கப்பட்டு புதியதொரு U வடிவ பள்ளத்தாக்கு உருவாகும்.இங்கு பழைய U வடிவ பள்ளத்தாக்கிற்கும் , புதிய U வடிவ பள்ளத்தாக்கிற்கும் இடையில் அமைந்துள்ள வாயில் பகுதி பீடங்கள் எனப்படும்.
செம்மறியுருப்பாறை.
பனிப்பாறை நகர்ந்து செல்லும் பகுதியில் சற்று உயரம் கூடிய பாறைகள் அகப்படும் போது பாறையின் ஒரு புறம் தேய்த்தலையும் ,மறு புறம் பறித்தலையும் மேற்கொள்ளும்.கால போக்கில் பாறையின் ஒரு புறம் தேய்வாகவும் மறு புறம் உடைந்தும் காட்சியளிப்பதே செம்மறியுருப்பாறை பாறை எனப்படும்.
தொங்கு பள்ளத்தாக்கு.
மலை பிரதேசத்தில் இருந்து நகர்ந்து வரக்கூடிய பனி ஆறானது பிரதான நதி பள்ளத்தாக்கில் வீழ்ந்து கொண்டிருக்கும். வெப்பநிலை குறையும் போது உறைப்பனி செயற்பாட்டால் பனியாறு உறைந்து பிரதான நதி பள்ளத்தாக்கில் வீழ்வதற்கு எத்தனித்து கொண்டிருப்பதே தொங்கு பள்ளத்தாக்கு எனப்படும்.
பனியரிப்பின் படிதல் நிலவுருவங்கள் பற்றி எவ்வாறு விளக்குவது?
படிதல் நிலவுருவங்கள்
மொறைன்கள்.
மொறைன்கள் என்பது மலைப்பாங்கான பிரதேசத்தில் இருந்து வரக்கூடிய பாறைத் துண்டுகள் மற்றும் பல பருப்பொருட்கள் என்பன படிவதால் உருவாகுவது மொறைன்கள் எனப்படும்.
இவற்றை மலைப் பள்ளத்தாக்குகளிலும்
அதனை அண்டிய பிரதேசங்களிலும் காண முடியும். இவ்வாறு மொரைன்கள் படிய விடப்படும் இடங்களுக்கு ஏற்ப பின்வருமாறு பெயர் குறிப்பிடப்படும்.
- பக்கப்படிவு.(பக்க மொறைன்)
- இடைப்படிவு.(இடை மொறைன்)
- முனைவுப்படிவு.(முனைவுமொறைன்)
- தரைப்படிவு.(தரை மொறைன்)
குத்துவாட் பாறைகள்.
பனியாறு அல்லது பனிப்பாறை நகர்ந்து செல்லும் விடத்து வன்மையான உயரம் கூடிய பாறைப்படை அகப்படும் போது பாறை படைக்கு பின்னால் பனியாறு கொண்டு வரும் கற்கள், மண் போன்ற பருப்பொருட்களை படியவிட்டு செல்லும் காட்சி குத்துவாட் பாறைகள் எனப்படும் பனியாறு அல்லது பனிப்பாறை நகர்ந்து செல்லும் விடத்து வன்மையான உயரம் கூடிய பாறைப்படை அகப்படும் போது பாறை படைக்கு பின்னால் பனியாறு கொண்டு வரும் கற்கள், மண் போன்ற பருப்பொருட்களை படியவிட்டு செல்லும் காட்சி குத்துவாட் பாறைகள் எனப்படும்.
எனவே மேற்குறிப்பிட்ட வகையிலேயே பனியரிப்பின் நிலவுருவங்கள் அமைந்து காணப்படுகின்றன.