நாம் கைகளை வீசி நடப்பது ஏன்?
ஏன் கைகளை வீசி நடக்கின்றோம் என்பதை சில நேரம் நம்மில் அநேகர் யோசிக்காமல் இருக்கலாம் ஏனெனில் இது சக மனிதர்கள் மத்தியில் பொதுவான ஒரு செயல்பாடு.
மனிதன் இரண்டு கால்களை பயன்படுத்தி நடக்கும் உயிரினம் எனவே புவி ஈர்ப்பு விசையில் நாம் தடுமாறி விடாதபடி நம்மை சமநிலைப்படுத்துவதற்காகவே இயல்பாக நாம் கைகளை வீசி நடக்கின்றோம். நாம் நடக்கும்போது கவனிப்போமேயானால் வலது காலை முன்வைக்கும் போது நமது இடது கை முன்னோக்கிச் செல்லும் இடது காலை முன் வைக்கும் போது நமது வலது கை முன்னோக்கி செல்லும் இது ஏன்? நாம் கை வீசாமல் நடந்தால் நமது உடலின் சமநிலை தவறி நாம் விழுந்து விடவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு முறை இதை முயற்சித்து வேண்டுமானாலும் பாருங்கள்
நியூட்டனின் மூன்றாம் விதி
ஆம் இது நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியான "ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு" என்ற கோட்பாட்டின்படி அமைந்துள்ளது
நாம் நடப்பது என்பது நமது பாதத்தை பூமியின் சாய்வாக அழுத்தி முன்னேறுவதால் சாத்தியமாகின்றது. அவ்வாறு நாம் பூமியை அழுத்தும் போது அதன் எதிர்வினையாக நாம் முன்னோக்கி தள்ளப்படுகின்றோம். இதனால் நம் உடலில் தற்காலிகமாக ஒரு சமமற்ற நிலைமை உருவாகின்றது.
அதாவது நாம் நடக்க அடி எடுத்து வைக்கும் போது நமது உடல் கீழே விழுகின்ற நிலை ஏற்படுகிறது. அப்பொழுது மற்ற கால் கீழே விழாதவாறு தடுக்கின்றது இந்த நிலையில் நியூட்டனின் மூன்றாவது விதியின்படி உடலின் மேற்பகுதியில் இதற்கு சமமான எதிர்வினை நிகழ்கின்றது.
இதுவே நாம் கைகளை வீசி நடப்பதன் ரகசியம்.