கட்டுரை எழுதுவது எப்படி?
பொருளடக்கம்:
கட்டுரை ஒன்றில் அமைய வேண்டிய விடயங்கள் எவை?
கட்டுரை ஒன்றில் தவிர்க்க வேண்டிய விடயங்கள் எவை?
கட்டுரை எழுதும் சிறந்த முறைகள்
கட்டுரையில் எவ்வாறான மொழிநடை கையாளப்பட வேண்டும்?
கட்டுரையை பலதரப்பட்ட வகைகள் மற்றும் அவற்றை எழுதும்போது நாம் கடைப்பிடிக்க முக்கியமான சில குறிப்புகள்
தலைப்பு வாரியாக வகைப்படுத்தப்பட்ட கட்டுரைகள்
ஏதேனும் ஒரு தலைப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படும் அல்லது கட்டுக்கட்டாக எழுதப்படும் ஒரு முறையே கட்டுரை என சுருக்கமாகக் கூறலாம். ஒருவர் தன்னுடைய கருத்தை தெளிவாக கூறுவதற்கும், பிறர் கூறுவதை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும் காணப்படும் ஒரு முறை கட்டுரை எனலாம்.கருத்துக்களை ஒழுங்காகவும், தெளிவாகவும், கோவைப்பட கூறுவதே கட்டுரையின் முக்கிய இயல்பாகும்.
கட்டுரையின் அமைப்பு.
மேலே கூறியவாறு கட்டுரையானது ஒரு விடயம் குறித்து அல்லது ஏதேனும் கருத்து தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்களை மற்றும் அம்சங்களை குறிப்பிடக்கூடியது. இவ்வாறு குறிப்பிடக்கூடிய கருத்துக்கள் தெளிவாகவும் அழகாகவும் அமைய கட்டுரையின் அமைப்பு முக்கியமான ஒன்றாக உள்ளது.
அந்த வகையில் கட்டுரையின் அமைப்பில் மூன்று பிரதான உறுப்புகளை நாம் காணலாம். அவையாவன:-
- முகவுரை.
- உடல் பகுதி.
- முடிவுரை.
முகவுரை.
முகவுரை என்பதை நாம் அறிமுகம் என்று கூற முடியும். அதாவது ஏதேனும் ஒரு விடயம் தொடர்பில் எழுதக்கூடிய அறிமுகமே முகவுரை ஆகும். அந்தவகையில் கட்டுரையில் எழுதப்போகும் மையக்கருத்து பற்றிய முக்கியத்துவங்களும், குறுகிய தெளிவும் கட்டுரையின் முகவுரையில் காணப்படும்.
உடல் பகுதி.
கட்டுரையின் பெரும் பகுதியாகவும், கட்டுரைக்கு உயிர் நாடியாகவும் காணப்படுவதே உடல் பகுதி. அதனடிப்படையில் உடல் பகுதியில் கட்டுரைக்கு உரிய மையக்கருத்து, பெறுமானங்கள், பயன்கள் மற்றும் விளைவுகள் என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி படிமுறை வளர்ச்சியின் ஊடாக குறிப்பிடப்படும்.
மேலும் அவ்வாறு குறிப்பிடப்படும் விடயங்கள் கட்டுரையின் தலைப்புக்கு ஏற்ற வகையில் அமைவதுடன், அதில் பல்வேறு விடயங்கள் மற்றும் தகவல்கள் நிரற்படுத்தி கூறப்பட்டிருக்கும்.
முடிவுரை.
முடிவுரை என்பது குறித்த ஒரு விடயம் பற்றி கட்டுரையின் அறிமுகம் மற்றும் உடல் பகுதியில் கூறப்பட்ட விடயங்களின் தொகுப்பாக காணப்படும். ஒரு கட்டுரையின் முடிவுரை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஏனெனில் கட்டுரையை வாசிக்கக்கூடிய வாசகரின் மனம் திருப்தி அடைவது எம்மால் எழுதக்கூடிய முடிவுரையிலேயே ஆகும். எனவே நாம் எழுதும் கட்டுரையினுடைய முடிவுரை தெளிவானதாகவும், சிறப்பானதாகவும் அமைய வேண்டும்.
கட்டுரை ஒன்றில் அமைய வேண்டிய விடயங்கள் எவை?
- கட்டுரையில் பந்திகள் ஒழுங்கான முறையில் அமைந்திருத்தல்.
- பொருத்தமான சொற்களை கையாளுதல்.
- கட்டுரையின் தலைப்புக்கு ஏற்றவாறு ஆழ்ந்த கருத்துக்களை கூற கூடியவையாக காணப்படல்.
- கட்டுரையை வாசிக்கும் வாசகர்களுக்கு சிறந்த பயன் தரக்கூடியதாக அமைந்திருத்தல்.
- வாசகர்களின் மனதை கவரக்கூடியதாகவும், இன்பம் தரக்கூடியதாகவும் காணப்பட வேண்டும்.
- குறித்த ஓர் விடயத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுதல்.
- கட்டுரைக்குப் பொருத்தமான உதாரணங்கள் குறிப்பிடப்படல்.
- கட்டுரையில் அவ்அவ் இடத்திற்கு ஏற்றவாறு பொருத்தமான குறியீடுகளை பயன்படுத்தல்.
கட்டுரை ஒன்றில் தவிர்க்க வேண்டிய விடயங்கள் எவை?
- கட்டுரையின் மையக் கருத்து நலிவடைய கூடிய வகையில் காணப்படல்.
- கட்டுரையில் ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் கூறல்.
- மையக் கருத்துக்களை விளக்கம் இன்றி கூறுதல்.
- அளவுக்கதிகமான சொற்களில் கூறுதல்.
- மையக்கருத்து இன்றி விளக்குதல்.
- கருத்துக்களை முரண்பட கூறுதல்.
- பொருத்தமற்ற மற்றும் பொருளற்ற சொற்கள் இடம் பெறுதல்.
- பயனற்ற சொற்களின் பயன்பாடு.
- முரண்பட்ட உதாரணங்களை எடுத்துக்காட்டுதல்.
கட்டுரை எழுதும் சிறந்த முறை.
ஏதேனும் ஒரு விடயம் தொடர்பில் பிறருக்கும் தெளிவு படுத்தும் ஒரு முறையே கட்டுரை என்பதை நாம் அறிவோம். எனவே ஒரு கட்டுரை சிறப்பான முறையில் அமைய வேண்டுமானால் அது எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அந்த வகையில் கட்டுரை எழுதுவதற்கான இரண்டு படிமுறைகள் உள்ளன. அவையாவன:-
- திட்டமிடுதல்.
- வடிவமைத்தல்.
திட்டமிடுதல்.
நாம் எழுதக்கூடிய கட்டுரை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி முன்கூட்டியே தீர்மானிப்பது திட்டமிடுதல் எனப்படும். இதன் ஊடாகவே நாம் கட்டுரைக்காக சட்டகம் தயாரிக்கிறோம். இச் சட்டத்தின் ஊடாக எழுதப்படும் விடயம் குறித்து நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த வகையில் திட்டமிடுதல் பின்வரும் பல்வேறு செயற்பாடுகளை கொண்டது.
- கட்டுரையில் எழுதப்படும் விடயங்களை தெரிவு செய்தல்.
- நாம் எழுதக்கூடிய கட்டுரையில் உள்ளடங்க கூடிய விடயங்களை பகுப்பாய்வு செய்தல்.
- அவற்றை மணக்கண்ணிலேயே ஒழுங்குபடுத்தல்.
- நாம் இனங்கண்ட விடயங்களை மனக்கண்ணில் நிலைநிறுத்தல்.
- கட்டுரைக்கான சட்டகத்தை தயாரித்தல்.
வடிவமைத்தல்.
நாம் கட்டுரைக்காக ஒழுங்குபடுத்திய சட்டத்தை எவ்வாறு எழுத வேண்டும் என கூறுவதே வடிவமைத்தல் ஆகும். வடிவமைத்தல் செயற்பாட்டின் ஊடாகவே கட்டுரை முறையான வகையில் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் வடிவமைத்தல் எனும் செயற்பாட்டில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
- எளிமையான வகையில் எழுதுதல்.
- சகலருக்கும் விளங்கக் கூடிய வகையிலும் தெளிவாக எழுதுதல்.
- முறையான குறியீடுகளை பாவித்தல்.
- கட்டுரையை முறையாக பந்தி பிரித்து எழுதுதல்.
- பந்தி பிரித்து எழுதும்போது முறையான தொடர்பொன்று காணப்படல் வேண்டும்.
- தெளிவான எழுத்தின் ஊடாக எழுதுதல்.
- சிறப்பான மொழி நடையை கையாளுதல்.
- பந்தியின் மையக்கருத்து கட்டுரையின் பிரதான கருத்துடன் தொடர்புப்படுதல்.
- இறுதியாக கட்டுரையை வாசித்து சீராக்கம் செய்தல்.
கட்டுரையில் எவ்வாறான மொழிநடை கையாளப்பட வேண்டும்?
கட்டுரையில் இலக்கிய நடை மற்றும் அறிவியல் நடை என காணப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான மொழிநடை பண்புகள் உள்ளன. அவற்றை நோக்குவோமாக.
இலக்கிய நடை:-
- உணர்ச்சி செறிவு அதிகம் கொண்ட மொழிநடை.
- கலைச்சொல் பயன்பாடு குறைவாக காணப்படல்.
- சொல் அலங்காரம் அதிகமாக கொண்ட மொழி நடை.
- கற்பனை அதிகம் காணப்பட வேண்டும்.
- தர்க்கரீதியான கருத்துக்கள் குறைவாகக் காணப்படல்.
- பகுப்பாய்வுகள் காணப்படாது.
- கலைச் சொற்களின் பயன்பாடு குறைவு.
அறிவியல் நடை.
- உணர்ச்சி செறிவு குறைவாக காணப்படும்.
- கற்பனைகள் காணப்படாது.
- கலைச் சொற்களின் பயன்பாடு அதிகமாக காணப்படும்.
- சொல் அலங்காரம் இல்லை.
- தர்க்கரீதியான கருத்துக்கள் அதிகம் காணப்படும்.
- பகுப்பாய்வுகள் அதிகம் காணப்படும்.