பஞ்சக்கருவிகளில் ஒன்றான காற்றரிப்பு
காற்றரிப்பு என்பது பிரதானமாக பாலைவன பிரதேசத்தில் இடம் பெறுவது ஆகும். உலகில் 1/6 பங்கு வெப்ப பாலைவனங்களாக காணப்படுகின்றன.
பாலைவனப் பிரதேசத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த முடியும்.
- பாலைவனப் பிரதேசத்தின் இயல்பு.
- காற்றரிப்பு எவ்வாறு நிகழ்கிறது?
- காற்றரிப்பின் தொழில்கள் எவை?
- காற்றரிப்பால் உருவாகக்கூடிய நிலவுருவங்கள் எவை?
பாலைவனப் பிரதேசத்தின் இயல்பு.
- வறண்ட பிரதேசமாக காணப்படும்.
- பகல் நேரத்தில் அதிக வெப்பம் கொண்ட பிரதேசமாக காணப்படும் .
- இரவு நேரத்தில் அதிக குளிர் கொண்ட பிரதேசமாக காணப்படும்.
- தாவரப் போர்வை பரந்து காணப்படாத ஒரு பிரதேசமாகும்.
பாலைவனத்தில் கள்ளி இனங்கள் ,முட்புதர்கள் ,கற்றாளை ஆகிய விசேட இன தாவரங்களை காண முடியும்.
|
பாலைவனத் தாவரம் போர்வைகள். |
பாலைவனப் பிரதேசத்தின் விசேட விலங்கு இனங்களாக ஒட்டகம் ,ஊர்வன, பாலைவன ஓணான் போன்றவற்றைக் காண முடியும்.
|
பாலைவன ஓணான். |
|
ஒட்டகம். |
- நதிகள் அற்ற பிரதேசமாக காணப்படும்.
காற்றரிப்பு எவ்வாறு நிகழ்கிறது?
பாலைவன பிரதேசத்தில் காற்றரிப்பு நிகழ்வதற்கு பின்வரும் காரணிகள் ஏதுவாகின்றன.
- பாலைவனப் பிரதேசத்தில் ஏற்படக்கூடிய சடுதியான வெப்ப மாற்றம்.
- பாலைவனப் பிரதேசத்தில் காணப்படக்கூடிய காற்றரிப் பரல்கள் .
- பாலைவனப் பிரதேசத்தில் மழைவீழ்ச்சியின் அளவு.
- பாலைவனப் பிரதேசத்தில் காணப்படக்கூடிய தாவரப் போர்வை.
- பாலைவனப் பிரதேசத்தில் உள்ள மணற்படிவுகள்.
பாலைவன பிரதேசத்தில் சடுதியான வெப்ப மாற்றம் என்பது பகல் நேரத்தில் அதிகமான வெப்பத்தையும் இரவு நேரத்தில் அதிகமான குளிரையும் கொண்டிருப்பது ஆகும்.இவ்வாறான வெப்ப மாற்றம் காரணமாக பாலைவனப் பிரதேசத்தில் உள்ள பாறைகளானது சுருங்குதல் மற்றும் விரித்தல் போன்ற செயற்பாட்டிற்கு உட்படும். அதாவது அதிக வெப்பத்தின் போது பாறையானது விரிதலுக்கு உட்படும்,அதிகமான குளிரின் போது பாறையானது சுருங்குதல் என்ற செயற்பாட்டிற்கு உட்படும்.இவ்வாறு பாறையானது சுருங்கி விரியும் போது சிலகாலம் சென்ற உடன் பாறை உடையும். இதன் மூலம் காற்றரிப்பானது இடம்பெறும்.
பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு செயற்பாடுகள் காரணமாக பாறைகள் சிதைவடையும் .இதன்போது பெரிய ,சிறிய ,நடுத்தர அளவிலான காற்றரிப் பரல்கள் உருவாகும். இக் காற்றரிப் பரல்கள் வேகமாக சுழலும் காற்றுடன் சேர்ந்து பாறைகளில் மோதுவதால் காற்றரிப்பு இடம்பெறும்.
பாலைவனப் பிரதேசத்தில் எப்போதாவது மழை பொழியும் . இதன்போது வெடிப்புக்கு உள்ளான பாறை படைகளில் மழைநீர் சென்று இரசாயன தாக்கத்தை ஏற்படுத்தி பாறைகளை மேலும் சிதைவுக்கு உள்ளாக்கும். இது காற்றரிப்பு நிகழ காரணமாக அமையும்.
பாலைவன பிரதேசத்தில் காணப்படக்கூடிய தாவரங்களின் வேர்கள் மண்ணை ஊடுருவிச் செல்லும். அதன் ஊடாக உட் செல்லக் கூடிய மழை நீரானது பாறைகளுடன் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்தி பாறையை சிதைவுக்கு உட்படுத்தும். இச்செயற்பாடு காற்றரிப்பு நிகழ ஏதுவாக அமையும்.
பாலைவனப் பிரதேசத்தில் உள்ள மணற்படிவுகள் பாலைவனப் பிரதேசத்தில் படிதல் நிலவுருவங்கள் உருவாக காரணமாக அமையும். எனவே மணற்படிவுகள் என்பது காற்றரிப்பு நிகழக் காரணமாகின்றது.
காற்றரிப்பு நிகழ மேலும் சில காரணிகள் ஏதுவாகின்றன. அவையாவன:-
- பாறைகளின் வன்,மென் தன்மை.
- காற்றின் வேகம்.
- வரண்ட தன்மையான மண்.
காற்றரிப்பின் தொழில்கள் எவை?
காற்றரிப்பின் பிரதான தொழில்களாக பின்வருவன உள்ளன.
- அரித்தல்.
- கொண்டு செல்லல்.
- படியவிடல்.
இவற்றுக்கு மேலதிகமாக சில காற்றரிப்பு தொழில்கள் உள்ளன. அவையாவன:-
- அடி அரித்தல்.
- அரைந்து தேய்த்தல்.
- மினுக்குதல்.
- தேய்த்தல்.
- உருட்டுதல்.
- காவிச் செல்லல்.
- வாரியிறக்கல்.
- சுழன்றரித்தல்.
அரித்தல்
காற்றும் காற்றினால் காவிக் கொண்டுவரப்படுகின்றன பொருட்களும் பாறைகளில் மோதுவதால் அரித்தல் செயற்பாடு இடம்பெறுகிறது.
அரித்தலின் மூன்று பிரதான செயற்பாடுகள்.
- வாரியிறக்கல்.
- தேய்த்தல்.
- அரைந்து தேய்த்தல்.
வாரியிறக்கல் செயற்பாடு ஊடாக காற்றானது பாலைவனப் பிரதேசத்தில் உள்ள தூசு துணிக்கைகளை காவிச்செல்லும் இதனால் பள்ளங்கள் உருவாகும்.
தேய்த்தல் செயற்பாடு என்பது காற்றால் காவி வரப்படுகின்ற பருப்பொருட்கள் புவி மேற்பரப்பில் மோதுண்டு உராய்விற்கு உட்படல் ஆகும்.
அரைந்து தேய்த்தல் என்பது காற்றால் வாரியிரக்கப்படும் பருப்பொருட்கள் பாறைப்படைகளில் மோதி பாறைகள் அரித்தலுக்கு உட்படல் ஆகும்.
கொண்டு செல்லல்.
மேலும் காற்றானது மூன்று முறைகளில் பாலைவன பருப்பொருட்களை கொண்டு செல்லும்.
- மேல் வாரியாக (தொங்கல்)கொண்டு செல்லல்.
- கீழ் வாரியாக (பாய்ச்சல்) கொண்டு செல்லல்.
- இடை வாரியாக (ஊரல்) கொண்டு செல்லல்.
படியவிடல்.
படிதல் செயற்பாடு எனும் போது அரிக்கப்பட்ட பருப்பொருட்கள் காற்றால் கொண்டு செல்லும் போது பாலைவன பிரதேசத்தில் தடைகள் ஏற்படும் விடத்து படியவிடப்படுகின்ற செயற்பாடு ஆகும்.
காற்றரிப்பால் உருவாககூடிய நிலவுருவங்கள் எவை?
காற்றரிப்பு நிலவுருவங்கள் அரித்தல் நிலவுருவங்கள், படிதல் நிலவுருவங்கள் மற்றும் நீரினால் உருவாகும் நிலவுருவங்கள் என மூன்று வகைப்பாடுகளில் காணப்படுகின்றன.
அவற்றுள் அரித்தல் நில உருவங்களாக பின்வருவன உள்ளன.
- பீடைக்கிடைத்திணிவு.
- யர்டாங்கு.
- தேன்கூட்டுப்பாறை.
- காளான் வடிவப்பாறை.
- தளத்திடைக்குன்று.
- காற்றரிபரல்.
- வாரியிறக்கல் பள்ளங்கள்.
- தட்டையுச்சி ஒங்கல்.
படிதல் நிலவுருவங்கள் பின்வருமாறு:-
- மணற் குன்றுகள்.
- தொடர் மணற் குன்றுகள்.
- நீர் மணற் குன்றுகள்.
- புச்ச மணற் குன்றுகள்.
- பக்க மணற் குன்றுகள்.
- முன்னோக்கி அமைந்த மணற் குன்றுகள்.
- பின் நோக்கி அமைந்த மணற் குன்றுகள்.
- பிறையுரு மணற்குன்று.
- நட்சத்திர மணற்குன்று.
- அலை வடிவ மணற்குன்று.
நீரினால் உருவாகும் நிலவுருவங்கள் பின்வருமாறு:-
- பஜாடா(வண்டல் விசிறி).
- நீரரி பள்ளங்கள்.
- வாடிஸ்.
- உப்பு ஏரிகள்.
- சரிவு சமதளம்.
எனவே மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே பஞ்சக்கருவிகளில் ஒன்றான காற்றரிப்பின் பிரதான செயற்பாடுகள் காணப்படுகின்றன.
காற்றரிப்பின் அரித்த நிலவுருவங்கள் பற்றி விளக்குவது எப்படி?
பீடைக்கிடைத்திணிவு.
பாலைவனப் பிரதேசத்தில் உள்ள மென்மையான பாறைகள் அரிக்கப்பட்டு வன்மையான பாறைகள் மட்டும் ஆங்காங்கே தூண்கள் போல காட்சியளிப்பது பீடைக்கிடைத்திணிவு எனப்படும்.
யர்டாங்கு.
பாலைவனப் பிரதேசத்தில் உள்ள மென்மையான பாறைகள் அரிக்கப்பட்டு வன்மையான பாறைகள் மட்டும் ஆங்காங்கே தூண்கள் போல காட்சியளிக்க கூடிய பீடைக்கிடைத்திணிவு காலப்போக்கில் காற்றின் செயற்பாட்டால் ஒரு பக்கம் மட்டும் தேய்த்தலுக்கு உட்பட்டு காற்றின் போக்கில் சற்று சாய்ந்து கணப்படல் யர்டாங்கு எனப்படும்.
காளான் வடிவப்பாறை.
பாலைவனப் பிரதேசத்தில் காணப்படும் உயரம் கூடிய மற்றும் அகலமான பாறைப்படை அகப்படும் போது காற்றின் தின்னற் செயற்பாட்டிற்கு உட்படும். இதன்போது பாறையின் கீழ் பகுதி ஒடுங்கியும், மேல் பகுதி புடைத்தும் காணப்படும்.இது காளான் வடிவில் காட்சியளிப்பதால் காளான் வடிவப்பாறை என்பர்.
தேன்கூட்டுப்பாறை.
பாலைவன பிரதேசத்தில் உள்ள குமிழ் வடிவ பாறைகளில் காற்றின் செயற்பாட்டால் தாழிகள் உருவாகும். இத் தாழிகளில் நீர் தேங்கும் போது சூரிய ஒளி காரணமாக தேன் கூட்டைப் போல் காட்சியளிக்கும்.இதனையே தேன்கூட்டுப்பாறை என்பர்.
தளத்திடைக்குன்று.
பாலைவன பிரதேசத்தில் உள்ள பாறைகள் மற்றும் நிலவுருவங்கள் காலப்போக்கில் காற்றின் தின்னற் செயற்பாட்டிற்கு உட்படும். இவற்றின் எச்சங்கள் மட்டும் ஆங்காங்கே சிறு குன்றுகளாக காட்சியளிப்பது தளத்திடைக்குன்று எனப்படும்.
காற்றரிபரல்.
பாலைவன பிரதேசத்தில் உள்ள பாறைகள் காற்றின் தின்னல் செயற்பாட்டால் சிறிய பாறைகளாக உடைக்கப்படுவதையே காற்றரிபரல் என்பர். இவை கூர்மையான பாறையாகவோ அல்லது சிறிய பாறையாகவோ அல்லது உருளை கற்களாகவோ அல்லது மணலாகவோ காணப்படலாம்.
வாரியிறக்கல் பள்ளம்.
பாலைவன பிரதேசத்தில் உள்ள பருப்பொருட்களை காற்றானது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாரியிறக்கும். இதன் போது பருப்பொருள் வாரப்பட்ட பகுதி பள்ளமாக மாறுவதையே வாரியிறக்கல் பள்ளம் என்பர்.
தட்டையுச்சி ஒங்கல்.
பாலைவன பிரதேசத்தில் உள்ள தனியான பாறைப்படை ஒன்றில் காற்றரிப்பின் தின்னற்ச் செயற்பாடு இடம்பெறும் போது ,பாறையின் மேல்பகுதியில் உள்ள மென்மையான பாறைகள் அரிக்கப்பட்டு தட்டையாக காணப்படுவதையே தட்டையுச்சி ஒங்கல் என்பர்.
காற்றரிப்பின் படிதல் நிலவுருவங்கள் பற்றி விளக்குவது எப்படி?
மணற் குன்றுகள்.
பாலைவன பிரதேசத்தில் காணப்படக்கூடிய மணல் படிவுகள் பாரிய குவியலாக நீண்டு காணப்படுவதையே மணற் குன்றுகள் என்பர். இவை படிந்து காணப்படும் விதத்திற்கு ஏற்ப பல்வேறு வகைப்படும். அவையாவன:-
- முன்னோக்கி நகரும் மணற் குன்று.
- பின்னோக்கி நகரும் மணற் குன்று.
- பக்க மணற் குன்று.
தொடர் மணற் குன்றுகள்.
பாலைவன பிரதேசத்தில் காணப்படக்கூடிய மணற் குன்றுகள் தொடர்தேர்ச்சியாக காணப்படுமாயின் தொடர் மணற் குன்றுகள் எனப்படும்.
பிறையுரு மணற்குன்று.
பாலைவன பிரதேசத்தில் காற்றானது கொண்டு செல்லும் பருப்பொருட்களை ஏதேனும் தடை ஏற்படும் போது படியவிடும். படியவிடப்பட்ட மணற்குன்றிற்கு முன் பகுதி பிறை வடிவில் காட்சியளிக்குமாயின் அது பிறையுரு மணற்குன்று எனப்படும்.
நட்சத்திர மணற்குன்று.
பாலைவன பிரதேசத்தில் உள்ள பல மணற்குன்றுகள் பல்வேறு திசைகளில் இருந்து ஒன்றாக இணைந்து காணப்படும் போது நட்சத்திர வடிவில் காட்சி அளிக்கும்.அது நட்சத்திர மணற்குன்று எனப்படும்.
அலை வடிவ மணற்குன்று.
பாலைவன பிரதேசத்தில் காற்றானது கொண்டு செல்லும் பருப்பொருட்களை படியவிடும். அவ்வாறு படிய விடப்படுபவை அலைவடிவில் காட்சியளிக்குமாயின்
அலை வடிவ மணற்குன்று எனப்படும்.
காற்றரிப்பில் நீரினால் உருவாகும் நிலவுருவங்கள் பற்றி விளக்குவது எப்படி?
பாலைவன பிரதேசத்தில் எப்போதாவது இருந்து பெய்யும் மழை காரணமாக இந்த நிலவுருவங்கள் உருவாகின்றன.
பஜாடா(வண்டல் விசிறி).
பாலைவன பிரதேசத்தில் எப்போதாவது இருந்து பெய்யும் செறிவான மழை காரணமாக இவை உருவாகின்றன. அதாவது மழை நீர் காரணமாக பள்ளமான பகுதிகளில் தற்காலிகமாக அருவி ஒன்று உருவாகும். இதன் இறுதிப்பகுதியில் காணப்படும் வண்டலே பஜாடா(வண்டல் விசிறி) எனப்படும்.
நீரரி பள்ளங்கள்.
பாலைவன பிரதேசத்தில் திடீரென பொழியும் மழையால் சரிவான பிரதேசங்களில் குறுகிய நேரத்திற்கு நீரோடை உருவாகும். இந்த நீரோடை பாலைவனப் பிரதேசத்தை அரித்துக் கொண்டுச் செல்வதால் பள்ளங்கள் உருவாகும்.இது நீரரி பள்ளங்கள் எனப்படும்.
வாடிஸ்.
எப்போதாவது இருந்து பெய்யும் மழையால் பாலைவன பிரதேசத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் மழைநீர் தேங்கும். பின்பு நீர் வற்றி வரண்ட ஆற்றுப்படுக்கையாக காணப்படுவதையே வாடிஸ் என்பர். இங்கு அதிக படிவுகளைக் காணலாம்.
உப்பு ஏரிகள்.
பாலைவன பிரதேசத்தில் மழை காரணமாக தற்காலிகமாக உப்பு ஏரிகள் உருவாகின்றன.அதிக ஆவியாக்கம் காரணமாக நீர் ஆவியாக்கப்பட்டு உப்பு படிவுகள் மட்டும் எஞ்சிகின்றன.
வேறு இணைப்புகள்:-பனியரிப்பு, கடலலையரிப்பு, தரை கீழ் நீர் அரிப்பு , ஓடும் நீர், பஞ்சக்கருவி என்றால் என்ன?